பேறு காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேறு காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 மார்ச் 2012

பிரசவகால தழும்புகள் மறைய ஆலிவ் ஆயில் பூசுங்க!

பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் அதிகம் கவலைப்படுவது வயிற்றிலும், தொடைப்பகுதிகளும் ஏற்படும் தழும்புகளுக்குத்தான். வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது என்றுதான் பலரும் ஆலோசித்துக் கொண்டிருப்பர்.

கர்ப்ப காலத்தில் வயிற்று தசைகளும், மார்பகங்களும் விரிவடைகின்றன. அதனால் அந்தப்பகுதியில் அரிக்கிறது. சொறிவதால் அந்த இடத்தில் தசை காய்ந்து விடுகிறது. அதுதான் பிரசவத்துக்குப்பிறகு தழும்பாகிறது. இதைதான் ஸ்டிரெச் மார்க் என்பார்கள். குழந்தை பிறந்த பின்னர் எல்லா பெண்களுக்கும் ஏற்படக் கூடிய மிகப் பெரிய பிரச்சனை இந்த தழும்புகள் தான்! இந்த தழும்புகளை முற்றிலும் வராமல் தடுக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக அதை குறைக்க முடியும்.

மாதுளம் பழத்தோல்

மாதுளைத்தோலையும், பசு நெய்யையும் கலந்து 3-வது மாதத்தில் இருந்து வயிற்றிலும் மார்பகத்திலும் தடவுங்கள். இதற்குப் பதிலாக ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் யுவதயாதி எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

உடல் அரித்தால் கை நகங்களை கொண்டு சொறியக்கூடாது. அரிக்கும் இடத்தில் வேப்பிலை அல்லது மெலிதான துணியால் தடவி கொடுங்கள். இப்படி செய்து வந்தால் பிரசவத்துக்கு பிறகு தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.

வயிறு சுருங்க பயிற்சி

கர்ப்ப காலத்தில் உடலில் முதுகு, கால்வலி, வயிறுவிரிதல் போன்ற போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.கர்ப்பமாக இருக்கும் பொழுது, அதாவது 7வது மாதத்தில் இருந்து ஆலிவ் ஆயிலை அடி வயிறு, கால், தொடைகளில் தேய்க்க வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் குளிக்க வேண்டும். இதோடு குழந்தை பிறந்த பின்பும் இவ்வாறு தொடர்ந்து முன்று மாதம் செய்ய வேண்டும். தினமும் அடிவயிறை குறைக்க கூடிய உடல் பயிற்சியினை தவறாமல் செய்யவும். இடுப்புக்கு பெல்ட் கட்டாயம் போடவும். இதன் முலம் படிப்படியாக வயிற்று பகுதி சுருங்கி பழைய தோற்றம் கிடைக்கும்.

தோப்புக்கரணம் போடுங்க

சுகப் பிரசவத்திற்குப் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து மல்லாந்து படுத்துக்கொண்டு வலது காலை மெதுவாக மேலே தூக்கவேண்டும். பின்னர் இடதுகாலை அதே போல் தூக்கவேண்டும். தினசரி 10 முறை இவ்வாறு செய்யவேண்டும். அதேபோல் நேராக நின்று கொண்டு இரண்டு கைவிரல்களும், கால் விரல்களை தொடுவதைப் போல செய்யலாம். தோப்புக்கரணம் போடுவதைப் போல போடலாம் வயிறு குறையும். சிசேரியன் என்றால் 5 மாதத்தில் இருந்து மருத்துவர்க ஆலோசனைப் படி இந்த பயிற்சிகளை செய்யலாம்.

கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம்...

ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. இதற்கு காரணம் தாய்மார்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்ளாததே என்கின்றனர் மருத்துவர்கள்.

ஃபோலிக் அமிலம் என்பது கர்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது. அதனால்தான் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே முதலில் ஃபோலிக் அமிலம் அடங்கிய மாத்திரைகளை சிபாரிசு செய்கின்றனர்.

கர்பிணிகளுக்கு அவசியம்

க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் குழ‌ந்தை‌யி‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்காகவு‌ம், தா‌யி‌ன் இர‌த்த அளவு அ‌திக‌ரி‌க்கவு‌ம் ஃபே‌லி‌க் அ‌மில‌ம் அ‌திகமாக‌த் தேவை‌ப்படு‌கிறது. பி வைட்டமின்களில் ஒன்றான இந்த ஃபோலிக் அமிலம் டி.என்.ஏ வளர்ச்சிக்கு அவசியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் நரம்பு மண்டல குறைபாடு இன்றி இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவேதான் கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் நிறைந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

சத்தான உணவு

மாத்திரைகள் தவிர ஃபோலிக் அமிலம் நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது தாய், சேயின் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ப‌ச்சை‌க் கா‌ய்க‌றிக‌ள், ‌கீரைக‌ள், ஈர‌ல்க‌ள், ஈ‌ஸ்‌ட், அவரை, மொ‌ச்சைக‌ள், கொ‌ட்டைக‌ள், முழு தா‌னிய‌ங்க‌ள் ஆ‌கியவை போ‌லி‌க் அ‌மில‌ம் அ‌திகமு‌ள்ள உணவு‌ப் பொரு‌ட்களாகும். இவைகளில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்ப காலத்தில் மரு‌த்துவ‌ர்க‌ள் ப‌ரி‌ந்துரை‌க்கு‌ம் மா‌த்‌திரைகளையும், உணவுகளையும் சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம். அப்பொழுதுதான் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்.

தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்

தாய்க்கும் சேய்க்கும் பிரிக்க முடியாத பினைப்பை ஏற்படுத்துவது தாய்பால். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் சர்க்கரைநோய் ஏற்படாது, கொழுப்பு சத்துநோய் ஏற்பாடாது, இதயநோய் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தாய்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உயர்ரத்த அழுத்தம்

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகமானது 56000 அமெரிக்க தாய்மார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காத 8900 பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தநோய் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர்ரத்த நோய் எதுவும் ஏற்படவில்லை. எனவே தாய் பால் கொடுப்பதற்கும், பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும் தொடர்ப்பு இருப்பது தெரிய வந்தது.

அழகு பாதிக்காது

நீண்ட நாட்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அழகுக்கு ஆபத்து வந்துவிடும் என்ற தவறான நம்பிக்கை இன்றைய பல இளம் தாய்மார்களிடம் உள்ளது. இதன்காரணமாகவே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வெகு விரைவிலேயே நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் 6 மாதம் வரை தாய்பால் கொடுத்தால் டயாரியா, தொற்று நோய்கள் எதுவும் குழந்தையை தாக்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆறுமாதம் அவசியம்

எனவே, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தயக்கம் காட்டும் இளம் தாய்மார்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

எனவே தாய்க்கும் சேய்க்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும் தாய்ப்பாலை கொடுக்க தாய்மார்கள் தயக்கம் காண்பிக்க வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

கர்ப்பிணிகள் செய்யக்கூடாதவை

வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை. மேலும், அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.


அழுகிய, கொஞ்சம் கெட்டுப்போன காய்கறி, பழங்களை நறுக்கிவிட்டு நல்ல பாகத்தை சாப்பிடும் பழக்கம் அறவே வேண்டாம்.

அதிக குளிர்ச்சி, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். பழச்சாறுகளை அதிகமாகக் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையற்ற சர்க்கரை சேர்வதால் நீரிழிவு ஏற்படலாம்.‌

மிகவு‌ம் சூடான பொருட்களை சாப்பிட வேண்டாம். இது கர்ப்பத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும் கடைபிடிக்கலாம்.

உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் செயல்களை செய்யக் கூடாது. குணிந்து எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்குவது, இடுப்பில் வைப்பது, எட்டாத பொருளை எட்டி எடுப்பது, குதிப்பது, வேகமாக நட‌ப்பது, வாகனம் ஓட்டுவது, நீண்ட தூரப் பயணம் செல்வது, அதிகமான எடையை தூக்கிக் கொண்டு படி ஏறுதல் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

மல்லாக்காகப் படுப்பது கூடாது என்பார்கள். ஏனெனில் குழந்தையின் எடை உங்களது ரத்தக்குழாய்களை அழுத்துவதால் உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் மூச்சுக் காற்றின் அளவு குறையும்போது அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான் மல்லாக்காகப் படுக்கக் கூடாது என்கிறார்கள்.

உடலுக்கு இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கு என்று தளர்த்தியான ஆடைகளை வாங்கி அணியவும். கர்ப்ப காலத்தில் உள்ளாடைகளின் அளவுகளிலும் மாற்றம் ஏற்படும். எனவே அதற்கேற்ற உள்ளாடைகளைத் தேர்வு செய்யவும்.

முகத்திற்கோ, தலைக்கோ, உடலுக்கோ எந்த வித புதிய க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எப்போதும் பயன்படுத்தி வந்த பொருட்களையும் அளவோடு பயன்படுத்துங்கள்.

சாதாரண காய்ச்சல், பேதி போன்ற எந்த நோய்க்கும் மருந்துக் கடைக்காரரிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. உங்களது மகப்பேறு மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் அவசரத்திற்கு சாதாரண் மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் நீங்கள் கர்ப்பமுற்று இருப்பதை முதலில் தெரிவித்துவிட வேண்டும்.

ரத்தப் போக்கு, நீர்க்கசிவு, வயிற்றின் இரு புறத்திலும் லேசான வலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உங்களது மகப்பேறு மருத்துவரிடம் சொல்லி உரிய மருத்துவம் பெறுவது அவசியம். இதில் எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

உங்களது கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கலோ அல்லது உறுதித்தன்மை குறைவோ இருந்தால் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

விரதம் இருப்பதோ, மிகவும் இருளான அல்லது கரடுமுரடான இடத்திற்கு செல்வதோ, ஓடுவதோ, கூட்டத்தில் செல்வதோ தவிர்த்தல் வேண்டும்.
மிகவும் குளிர்ந்த மற்றும் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டாம். அதிகமான கவலை மற்றும் மன அழுத்தம் பிறக்கும் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமலாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.

நீண்ட பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் போகக் கூடாது. பேருந்தை தவிர்த்துவிட்டு ரயிலில் செல்லலாம்.

சாதாரண எக்ஸ்-ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமான அலைச்சல், அதிகமான மன, உடல் அழுத்தம் போன்றவையும் தவிர்த்தல் நலம்.

மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதிக உயரம் கொண்ட குதிகால் செருப்புகள், காற்றுப்புகாத ஆடைகள், அதிக வாசனை திரவியங்கள் வேண்டாம்.

கர்ப்பிணிகள் இரும்பு சத்து மாத்திரைகள் பாவித்தால் பாதிப்பும் அதிகமாம்.....

இரும்பு சத்து குறைபாடு காரணமாக, 33 சதவீதம் பேர் அனிமீயா என்னும் இரத்தச் சோகை நோயால் அவதியுறுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உடலின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். ஆனால் கர்ப்பிணிகள் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரைகள் உட்கொள்வது ஆபத்தானது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இருப்பு சத்தின் பங்கு அதிகம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது.உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இரத்த சோகை உண்டாகும். இதனால் உடல் சோர்வடைந்து சுறுசுறுப்பு குறைந்து விடும்.

பெண்களுக்கு இரும்பு சத்து

பெரும்பாலும் பெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப் போக்கு இருந்தால் உடலில் இரும்புச்சத்தின் இருப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடினால் மூளை வளர்ச்சி குறைவது, புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதன் காரணமாகவே கர்ப்பமாக இருக்கும் போதே பெண்களுக்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே சமயம் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன் அளவு 27 மி.கி அளவு தேவைப்படுகிறது. தினசரி உணவில் 30 மி.கி இரும்பு சத்து கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால், அது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச் சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு மூலமே இரும்புச் சத்தினை பெற முயற்சிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

நச்சாகும் இரும்பு சத்து

சிறு குழந்தைகளுக்கும் தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

காய்கறிகள் கீரைகள்

சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.

முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.முட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது

காபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள கார்பாலிக் அமிலம் குடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால் மேற்கண்ட பானங்களை தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.