மன அழுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன அழுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஜூன் 2016

மன அழுத்தமா?

மன அழுத்தமானது மூளையின் ஆற்றலைக் குறையச் செய்து அல்லது பழுதடையச்செய்து அதனால் சிந்திக்கவோ, செயப்படவோ முடியாமல் செய்துவிடுகிறது. டல்லாக இருக்கும் ஒருவரைப் பார்த்து கேட்டாலே மனசு சரியில்லை என்றுதான் கூறுவார்கள். மனதிற்கும் அழகிற்கும் அத்தனை தொடர்புள்ளது. மனது நன்றாக இருந்தாலே முகத்தில் வசீகரம் தோன்றும் புன்னகை தவழும், அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க நன்றாக குளிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க அதுவே வழி என்கின்றனர்.

எண்ணெய் மசாஜ்

‘சனி நீராடு’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர். அதன் காரணம் சனிக்கிழமை மட்டுமே குளிப்பது இல்லை. வாரம் ஒருநாள் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து நன்றாக குளிர, குளிர குளிக்க வேண்டும் என்பதுதான். இதனால் உடலில் உள்ள சூடு குறையும், உடலும் மனமும் குளிர்ச்சியடையும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடம்பில் சேரும் விஷத்தன்மை நீங்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு தகுந்தவாறு அதற்கேற்ப எண்ணெய்களை தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பது நன்மை தரும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் சருமநோய்கள் மறையும், உடல் மெருகு கூடும். புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

இயற்கை மூலிகைகள்

குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு, ரசாயன கலப்பு கொண்டது. அதுபோல தலைக்கு தேய்க்கப் பயன்படுத்தப்படும் ஷாம்புவும் எண்ணற்ற ரசாயனங்களை கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக தேன், பால் கற்றாழைச் சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக்கு குளிக்கலாம். இது உடம்பில் உள்ள அழுக்கை நீக்குவதோடு அழகும், புத்துணர்ச்சியும் தரும். இந்தக் கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலைமாவு, தேன் கலந்து குளித்தால் சருமம் மெருகேரும். இதனால் மனஅழுத்தம் குறையும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொடுகு நீக்குங்கள்

மன அழுத்தம் தலையையும், தலைமுடியையும், அதிகம் பாதிக்கும். பொடுகு தோன்றி தலை அரிப்பு எடுக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம் மன அழுத்தமே என்கின்றனர் மருத்துவர்கள். எனவே நாம் தினமும் குளிப்பதைப்போலவே நாம் பயன்படுத்தும், சீப்பு, டவல் போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். வாரம் ஒருமுறையாவது சுடுநீரில் போட்டு அவற்றை அலசவேண்டும். இதனால் பொடுகு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தானதா சாப்பிடுங்க

மனச்சிக்கலால் மலச்சிக்கல் ஏற்படும். இதுவும் ஆரோக்கியம், அழகு குறைவுக்கு காரணமாகும். எனவே நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும், கீரைகள், பழங்களையும் உட்கொள்ள வேண்டும். புடலங்காய், பீர்க்கங்காய், போன்ற காய்கறிகள் அதிக நார்ச்சத்து மிக்கவையாகும். இதனால் உடல் வனப்பு கூடுவதோடு, சருமம் பளபளப்பாகும்.

27 செப்டம்பர் 2015

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். 

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.

- தமிழ் ஓசை களஞ்சியம்

20 நவம்பர் 2014

ஸ்ட்ரஸ் பஸ்டர் ஸ்விம்மிங்!

*உடல் முழுவதற்குமான உன்னதப் பயிற்சி நீச்சல். சைக்கிளிங், ரன்னிங்கை விட நீந்துவதால் அதிகக் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. உடல் பருமனான குழந்தைகளுக்குச் சிறந்த பயிற்சி! ஒரு மணி நேர பயிற்சியில் 500-650 கலோரிகள் வரை எரிக்கமுடியும்.
* மூச்சை இழுத்து விடுவதால் நுரையீரலுக்குச் சிறந்த பயிற்சியாக இருக்கிறது.
* அதிக டென்ஷன் இருந்தாலும், நீரில் நீந்தும்போது, சில்லென்ற உணர்வும், உடல் அசைவுகளும் ஸ்ட்ரெஸ்ஸையும் பஸ்பமாக்கிவிடும்.
* ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் ரத்தம் பம்ப் ஆவதால் இதயம் வலிமை பெறும்.
* நீந்துதல் பயிற்சியால் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்.
* சிறு வயதிலேயே நீச்சல் பழகுவதால், வயதான காலத்தில் வரும் மூட்டுத் தொடர்பான பிரச்னைகளை வரவிடாது.
* தசைகள் நன்கு வளைந்து கொடுக்கும். தசைப் பிடிப்புகள், சுளுக்கு போன்ற பிரச்னைகள் வராது.
* உடலில் உள்ள வெப்பம் குறைந்து சமச்சீரான நிலையைப் பெறும்.
* நீச்சலை செய்வோருக்குப் பக்கவாதம் பக்கம் வராது.
* டைப் 2 சர்க்கரை நோய், இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் வராமல் காக்கும்.
உடல் உறுதிதன்மை பெறும்.
* மனஅழுத்தம், டென்ஷன், பதற்றம் போன்ற மனம் சார்ந்த தொல்லைகள் தீரும்.
நன்றி- ஜூனியர் விகடன்