12 மே 2013

துளசி

எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

03 மே 2013

இஞ்சி... சுக்கு... கடுக்காய்--இய‌ற்கை வைத்தியம்:-

தினமும் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இன்றைக்கும் கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி என்னதான் செய்கின்றன அவை?

சின்ன சின்ன துண்டுகளாக இஞ்சியை காலையில் சாப்பிடலாம். இல்லாவிட்டால் இஞ்சி சாறு எடுத்து, அஞ்சு நிமிஷம் அப்படியே வைத்தால் அடியில் வெள்ளையாக படியும். மேலே தெளிந்த சாறை மட்டும் குடித்தால் உடல் சுறுசுறுப்பாகும். வாய்வுத் தொல்லை, அஜீரணக்கோளாறு, சளித் தொல்லை எதுவும் எட்டிப் பார்க்காது.

பகலில் சுக்கு மல்லிக் காபி சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல், இருமல், வாய்வுப் பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும். அதேபோல், ராத்திரியில் தூங்குவதற்கு முன்பாக கடுக்காய் சாப்பிடுவது நல்லது. இரண்டு, மூன்று கடுக்காயை இடித்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சவும். அவை பாதியாக சுண்டிய பிறகு, நன்கு ஆற வைத்து குடிக்கவும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை, மூலம் ஆகிய தொந்தரவுகள் குறையும்.