24 ஜூலை 2011

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை

மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது? என்று கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், "சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது" என்றார்.

தஞ்சை "பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்" - இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து... வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள். வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும். வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும். இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், "சாப்பிட்டது போதும்" என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.

வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.

ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.

இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.

வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?

தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.

எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.

கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.

ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

தமிழ் தாயகத்திற்காக...

முஹம்மத் சுல்தான்

கறிவேப்பிலை: புற்று அபாயத்தை தடுக்கும்!!

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

-சித்த‍ மருத்துவர் சிவகுமார்

மரபணுவை திருத்தி பரம்பரை நோய் வராமல் தடுக்கும் விஞ்ஞானம்..!

பத்து வருடங்களுக்கு முன், அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரும் விடுத்தக் கூட்டறிக்கையில் மனித ஜீனோமின் மாதிரி வரைவு உருவாக்கப்பட்டதாக அறிவித்தபோது, மரபணு (அ) ஜெனிடிக்ஸ் துறையில் மிகப்பெரிய புரட்சி தொடங்கிவிட்டதை உலகம் உணரத் தொடங்கியது. இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே மருத்துவத் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் செல்வதற்கான ஆராய்ச்சிகள் ஜெட் வேகத்தில் பறக்கத் தொடங்கிவிட்டன. உயிரியல் ரகசியத்தை அணுவணுவாக தோண்டத் துவங்கி யது விஞ்ஞான உலகம். மிகச் சாதாரணமாக கூறவேண்டு மானால் "நீ யார் என்பதை உன்னுள் தேடு'. இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது மரபணு ஆராய்ச்சிகள். ஒவ்வொரு மனிதனின் தனி அடையாளங்களும், உடல் கூறுகளும் பாரம்பரியமாக கிடைக்கப்பெற்றது. கண்களின் நிறம், சருமம், மூக்கு வடிவம். போன்ற எல்லா அம்சங் களும் வழி வழியாக, சந்ததிகளாக தொடருபவை.

நாம் எல்லோரும் எண்ணற்ற செல்களினால் ஆக்கப்பட்டிருக்கிறோம். செல் என்பது நுட்பமான, நுண் ணிய உயிரணு. செல்லில் பாரம்பரியத்தின் வரலாற்றுப் பதிவு பொதித்து வைக்கப்பட்டுள்ளது. பிறப்பின் ரகசியம் எழுதப்பட்டிருக்கிறது. மொழியில்லாத மொழி, சாங்கேத மொழி. நம் எதிர்கால சந்ததியினருக்கு அளிக்கப் போகும் வம்ச ரகசியம். செல்லின் நடுவே நியூக்கிளியஸ் -கரு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நியூக்கிளியஸினுள்ளே சிக்கலான 46 குரோமோசோம்கள் இடம் பெற்றிருக்கிறது. குரோமோசோம்களை நுட்பமாக கவனித்தால் டி.என்.ஏ (டி.ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்) எனும் சிக்கலான மாலிக்யூல்கள் காணப்படுகின்றன. இது முறுக்கிய ஏணிப்படி போன்ற சங்கிலித்தொடர் அமைப்பு. சற்று வித்தியாசமான ஏணி. ஏணியின் இருபுறம் இரு தண்டுகளும், அதனை இணைக்கும் எண்ணற்ற படிகள் உள்ளதாக கற்பனை செய்து கொண்டால் இதன் அமைப்பு எளிதில் விளங்கும், இந்த ஏணி, நான்கு படிகள் இடைவெளியில் ஒன்றுக் கொன்று எதிர்திசையில் முறுக்கிவிட்டுக் கொண்டே சென்றதைப் போன்ற அமைப்பு. தண்டுகள் சர்க்கரை மற்றும் பாஸ்பேட் குழுக்களால் ஆனது. இவையனைத்தும் எஸ்டர் பிணைப்பினால் பிணைக்கப்பட்டிருக்கும். இதில் ஒவ்வொரு முறுக்கமும் ஒரு நியூக்ளிடைடு. நியூக்ளிடைடில் நான்கு படிகள் போல காணப்படுவது அடினைன் (ஆ), குவனைன்(ஏ) சைட்டோசைன் (ஈ) தைமின் (ப) ஆகிய கார வரிசைகள், உதாரணமாக, ஏஆபஈ என்பது ஒரு கார இணை என்று வைத்துக்கொண்டால் இந்த நான்கு காரங்களை எண்ணற்ற விதத்தில் மாற்றி கார வரிசைகளை உருவாக்கலாம். இந்தக் கார வரிசைகள் தான் மரபுத் தகவல் கள். இதை சாங்கேத மொழி என்பதை விட கட்டளைகள் என்பதே பொருத்தமாக இருக்கும். இது போன்ற சாங்கேத தகவல்கள் அமைந்த சிறு துண்டம்தான் ஜீன். ஒரு குறிப் பிட்ட செயலுக்கான தகவல் தொகுப்பு ஜீன். முழு டி.என்.ஏவில் உள்ள அனைத்து ஜீன்களையும் சேர்த்து ஜீனோம் என்கிறார்கள்.

ஒவ்வொரு மரபணுத் தகவலும் ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தை குறிக்கும். அமினோ அமிலம் தகவலுக்கு தகுந்த புரோட்டீன்களை (புரதம்) உருவாக்கும். பின்னர் புரோட்டீன்கள் நொதிகளாகவும், ஹார்மோன்களாகவும், ஆண்டிஜென்களாகவும் (எதிர்புரத தூண்டி) மாறுகிறது. புரோட்டீன்கள் முக்கியமாக உடல் உறுப்புகளாகவும், உருவ மற்றும் செயல் வடிவம் பெற்று, பல்வேறு செயல்களுக்கும், உயிர் வேதியில் மாற்றங்களுக்கும் காரணமாகிறது. காரங்களின் வரிசைக்கும் (மரபணு தகவல்) புரோட்டீனை உருவாக்கப்போகும் அமினோ அமில வரிசைக்கும் உள்ள தொடர்புதான் ஜெனிடிக் கோடு. மரபணுத் தகவல்களால் நம் கண், காது, மூக்கு, உடல் அமைப்பு போன்ற நுட்பமான தகவல் மட்டும் பல சந்ததிகளாக தொடரவில்லை. நம் முந்தைய சந்ததியினர் அளித்த நோய்களுக்கும்தான். புற்றுநோய், சர்க்கரை வியாதி, இதய மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் கூடவே தொடரும். அதனால், நம் பெற்றோர்களை பார்த்து எனக்கு என்ன மிச்சம் வைத்தீர்கள் என கேள்வி கேட்க முடியாது.

ஜினோம் வரிசைப்படுத்தலும் மனித ஜீனோம் திட்டமும்

மனித ஜீனோம் சுமார் 3 மில்லியன் மரபணுச் செய்திகள் (அ) தகவல்கள் பொதிந்து வைக் கப்பட்ட நீண்ட தொடர். டி.என்.ஏ மாலிக்யூ லில் உள்ள ஜீனோம் வரிசைப்படுத்துவது என்பது மரபணு செய்தியான கார இணை களின் சரியான வரிசையை கண்டறிவதுதான். மனித ஜீனோம்களை வரிசைப்படுத்த மனித ஜீனோம் திட்டம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. 1990-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட மனித ஜீனோம் திட்டத்தில் 1 சதவீதம் ஜீனோம் வரிசைப்படுத்திய பிறகு சீனாவும் இந்த குழுவில் இணைந்த கொண்டது. முதன் முதலில் ஜீனோம் மாதிரி விரைவு உருவாக்கி 2000- ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி உலகுக்கு அறிவித்தது. முதலில் 90 சதவீதம் ஜீனோம்களை வரிசைப்படுத்தியது. அதில் 1000 கார வரிசை களுக்கு ஒரு தவறு இடம் பெற்றிருந்தது. மேலும் 1,50,000 இடை வெளிகளுடன் தரமான 28 சதவீத ஜீனோம்களைத் தான் இத்திட்டத்தால் வரிசைப்படுத்த முடிந்தது. முதன் முதலாக 2001- ஆம் ஆண்டு கிரைக் வென்டர் மற்றும் சக விஞ்ஞானிகள் அவர்களுடைய ஜீனோம் வரிசைப் படுத்தல் ஆய்வுகள் வெளியிடப்பட்டது, அதே சமயம் மனித ஜீனோம் திட்டத்தின் மனித ஜீனோம் வரிசைப்படுத்தல் ஆய்வுகள் வெளியிடப்பட்டது. மேலும் 2003 ஏப்ரல் மாதம் மிக நுணுக்கமாக, 400 இடைவெளிகள் மட்டுமே கொண்ட, 99 சதவீத ஜீனோம்களை இத்திட்டத்தினரால் வரிசைப் படுத்தப்பட்டது. இது 10,000 கார வரிசைக்கு ஒரு தவற்றைக் கொண்டிருந்தது. 3 மில்லியன் கார இணைகளை வரிசைப்படுத்தவும், அனைத்து ஜீன்களை அடையாளம் காணவும் 13 வருடங்கள் எடுத்தது.

தற்போது ஒரு நாளைக்கு 25 முதல் 100 பில்லியன் கார இணைகள் வரிசைப்படுத்தக்கூடிய இயந்திரங்கள் வந்து விட்டன. அதிகமான மரபணு தகவல்களை (ஜீனோ டைப்) நாம் புரிந்துகொள்ளக்கூடிய பீனோடைப் தகவல் களாக மாற்றவும், இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் அதிக திறன் கொண்ட கணினி தேவைப்படுகிறது எவ்வளவு என்கிறீர்களா? நம்முடைய சாதாரண கணினியைப்போல 10,000 மடங்கு.

இந்தியாவின் முயற்சி

இந்தியா 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி மனித ஜீனோம் வரிசைப்படுத்துதலில் தீவிரமாக இறங்கியது. ஜீனோம் வரிசைப்படுத்துத லில் இந்தியா இறுதியாக நுழைந்தாலும் மிக வேகமாக மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தியது. அதுவும் நாற்பத் தைந்தே நாட்களில் செய்து முடித்தது. வயது 52, உயரம் 167 செ.மீ, எடை 52 கிலோகிராம் கொண்ட, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனிதனின் ஜீனோம்தான் இந்தியா வரிசைப்படுத்திய ஜீனோம். அந்த அதிர்ஷ்டசாலியின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தும் எண்ணம் தற்போதைய ஈநஒத தலைவர் பேராசியர் சமீர் பிரம்மசாரியால் உரு வானது. தற்போதைய ஒஏஇஒலியின் தலைவர் ராஜேஸ். எஸ்.கோகலே தலை மையில் ஸ்ரீதர் சிவசுப்பு வினோத் ஸ்கரியா ஆகிய விஞ்ஞானிகளுடன் 6 மாணவர்கள் சேர்ந்த குழு மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தியது. இதனை செய்து முடிக்க நொடிக்கு ஒரு டிரில்லியன் செயல் வேகம் கொண்ட சூப்பர் கணினிகள் ஈநஒதலின் உதவியால் பயன்படுத்தப்பட்டது. சுமார் 51 ஜிகா கார வரிசைகள் கட்டிங்- எட்ஜ் தொழில்நுட்ப முறையில், 76 ஜீன் துண்டுகளின் 10 லட்சம் கார வரிசைகள் வரிசைப்படுத்தப்பட்டது.

மரபணு மருத்துவம் (அ) ஜீன் மருத்துவம்

மனிதனின் ஜீனோம் வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்விக்கு இனிவரும் காலங்கள் தீர்க்கமான பதில்களை சொல்லக் காத்திருக்கிறது. நோய் வரும் முன் காப்போம் என்ற வாக்கியம் உண்மையில் இந்த மருத்துவமுறைக்கு மிக பொருந்தும். பாரம்பரியமாக தொடரும் புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களை ஜீன்களில் கண்டறிந்து, திருத்தப்பட்ட ஜீன்களை அவ்விடத்தில் இணைத்தால் போதுமானது. தேவையன்றி நோய் வந்தபின் மருந்தோ, மாத்திரையோ சாப்பிடத் தேவையில்லை. அதாவது இருதய நோய் ஏற்படும் என்ற தகவலை வெட்டி எறிந்து விட்டு, ஆரோக்கியமான மனிதரில் எடுக்கப்பட்ட இருதய தகவலை இணைத்துவிட்டால் போதுமானது. இவ்வகை மாற்றங்கள் இருவகைகளில் செய்யப்படுகிறது. உடல் செல்களிலும், கருசெல் அல்லது இனப்பெருக்க செல்களிலும் இவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட ஜீன் சிகிச்சைமுறை கையாளப்படுகிறது. உடல் செல்கள் பெருக்கம் அடைவது குறைவு. எனவே இம்முறை ஒருசில நோய்களுக்கு மட்டுமே பயன்படும். கருசெல் அல்லது இனப்பெருக்க செல்களில் திருத்தியமைக்கப்பட்ட வேற்று மனிதர்களின் ஜீன்களை இணைத்து நோய்களை இல்லாமல் செய்யலாம். நமக்கு தேவைப்படும் உடல் உறுப்புகள், அமைப்பு, கண்கள் போன்ற வற்றை பெறலாம். எதிர்காலத்தில் உன்னிடம் இருக்கும் இந்த நீளமான மூக்கு என்னுடையது என்று யாரேனும் சொந்தம் கொண்டாடினால் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

ஜீனோம் வகைப்பாட்டுத் திட்டங்கள்

ஒரு மனிதனின் ஜீனோம்களை வரிசைப்படுத்தி, அதனை ஒரு அடிப்படை முன்மாதிரியாக வைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் ஜீனோம்களும் வெவ்வேறு வகையானது. ஒரே மாதிரியான இரட்டைகள் இதற்கு விதிவிலக்கு இரு வெவ்வேறு மனிதர்களின் ஜீனோம்களைக் கொடுத்து வித்தியாசங்களை கண்டுபிடி என்றால் சுமார் 60 லட்சம் வித்தியாசங்கள் கண்டுபிடிக்க லாம். எனவே பல தரப்பட்ட மனிதர்களின் ஜீனோமை வரிசைப்படுத்தி ஒரு ஜீனோம் தரவு புலம் அல்லது தரவுதளம் உஹற்ஹ க்ஷஹள்ங் உருவாக்குவது அவசியம். தரவு தளம் பெருமளவி லான மரபணுத் தகவல்கள் அல்லது பதிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் தனி மனித குணாதிசயங்கள், நோய்களின் வரலாறு ஆகியவற்றை உட்கொண்டதாக இருக்க வேண்டும்

இண்டர்நேஷனல் ரிசர்ச் கன்சார்டியம் எனும் அமைப்பு பல்வேறு மனிதர்களின் ஜீனோம் வரிசைப் படுத்த 1000 ஜீனோமை திட்டத்தை 2008-இல் தொடங்கியது, மருத்துவத்திற்கு உதவும் வகையில், மிக விரிவாக பல்வேறு மனிதர்களின் ஜீனோம் வரிசைகளை உருவாக்குவது இதன் நோக்கம். உலக அளவில் விஞ்ஞான சமூகத்திற்கு பயன்படும் தரவு தளம் உருவாக்க முனைந்துள்ளனர்.

உலகிலேயே முதன் முதலாக, இந்தியாவில் பேராசிரியர் சமீர் பிரம்மச்சாரி தலைமையில், இந்தியாவில் உள்ள பல்வேறு இன மனித ஜீனோம் வரைவு உண்டாக்கி, வெற்றி கண்டுள்ளனர். இந்தப் பணியில் 12-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களும் சுமார் 150 விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர். உயிரி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பலதரப்பட்ட 1000 பேர்களின் ஜீனோமை வரிசைப்படுத்துவது இதன் பணி. நம்நாடு உலக மக்கள்தொகையில் 1/6 பங்கு பலதரப்பட்ட மக்களை பெற்றிருப்பதினால் இந்த வெற்றியானது முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல சீனா 100 மனிதர்களின் ஜீனோமை வரிசைப்படுத்த யான் ஹீவாங் திட்டத்தை 2007-இல் தொடங்கியது.

எதிர்நோக்கியுள்ள சவால்கள்

இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் வளரும் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பாரம்பரிய நோய்களை குணப்படுத்த முடியும், கழிவுநீரை சுத்தப்படுத்தும் பாக்டீரியாவை உருவாக்கி கழிவுநீரிலிருந்து நன்னீர் உண்டாக்கலாம். வாயு மண்டலத்தில் உள்ள கார்பன்- டை- ஆக்ஸைடை எடுத்து அதனை எரிபொருளாக மாற்றும் பாக்டீரியாவை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவை அனைத்திலும் வெற்றி கிட்டலாம். இருந்தபோதிலும், முதலில் நோய்களை குணப் படுத்துவதில் புரட்சி உண்டாக்கட்டும். அதன் பின் மற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்த லாம் என்கின்றனர் மற்றொரு பிரிவினர். பயோ டெக்னாலஜி கம்பெனிகள் மனித மரபணு தகவல்களை விற்பது லாபகரமாக இருக்குமென எண்ணி மும்முர மாக செயல்படுகின்றன. கிரைக்வென்டர் தனியார் கம்பெனிகள் இதைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும் என எச்சரிக்கிறார். ஜீனோம் வரிசைப் படுத்தல் வழி குறைபாடுள்ள ஜீன்களை அறிந்து, அதனை களைவது மட்டுமல்ல அதன் நோக்கம் திறமை வாய்ந்த ஜீனோம்களை அறிவதும் கூட, அவ்வாறு செய்யும்போது மனிதனின் திறமையற்ற ஜீன்களை களைய முனையும் விஞ்ஞான உலகம். இதனால் மனிதனின் உண்மையான பிறப்பு என்பது குழிதோண்டி புதைக்கப்படும். எதிர்காலத்தில் அசல் மனிதர்கள் இருக்கமாட்டார்கள் நகல் மனிதர்களே நடமாடுவார்கள். எப்படி இருப்பினும் இந்த ஆய்வுகள் அனைத்தும் மனிதகுலத்தின் நன்மைக்கு செய்யப்படும் புரட்சி என்பதில் மகிழ்ச்சியடைவோம்.

நன்றி: எஸ்.விஸ்வநாதன் & nakkiran.com

Cancer-Fighting Foods: Facts and Fiction

புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. இக்கட்டுரையில் பத்துவிதமான உணவுப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து நம்மை காக்கக்கூடியவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1. மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் ELLAGIC ACID மற்றும் POLYPHENOL ANTIOXIDANTS ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்பொருட்கள் உடல் பாகங்களில் கட்டிகள் வளருவதை தடுக்கும் ஆற்றல் உடையவை. உச்சரிக்க இயலாத கனிகளின் பெயர்களை எண்ணி குழப்பமடையத் தேவையில்லை. அந்தந்த பருவங்களில் கிடைக்கக்கூடிய கனிகளை சீராக உண்டு வருவதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

2. சாக்லேட்கள் உடலுக்கு தீங்கானவை என்று மெய்ப்பிக்க எத்தனையோ வல்லுநர்கள் முயன்று தோற்றுப் போயிருக்கிறார்கள். சாக்லேட்டில் உள்ள கோக்கோ, சர்க்கரை இவற்றின் கலவை விகிதம் குறைந்தது 70 சதவீதமாக இருக்குமாயின் சாக்லேட் உடலுக்கு நல்லது. கோக்கோவின் அளவு கூடும்போது சாக்லேட் கருமை நிறமாகவும் கசப்பானதாகவும் இருக்கும். இந்த நிலையில் சாக்லேட்டில் உள்ள ANTIOXIDANTS மற்றும் மருத்துவக்குணமுள்ள POLYPHENOLS ஆகியவை செயல்படக்கூடிய நிலையில் இருக்கும். கோக்கோவில் உள்ள CATECHINS எனும் வேதிப்பொருள் தேயிலையிலும் காணப்படுகிறது. தென் அமெரிக்கர்களின் உணவுப்பழக்கத்தை ஆராய்ந்தபின் இதய நோய்கள், மாரடைப்பு, புற்றுநோய் இவையெல்லாம் CATECHINS வேதிப்பொருளால் தடுத்து நிறுத்தப்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

3. மஞ்சளும், இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள CURCUMIN என்ற வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்துவிடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையல்லாம் சோம்பேறிகளுக்கானவை. மஞ்சளையும் இஞ்சியையும் மருந்துப்பெட்டியில் வைக்கவேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள்.

4. பருப்புவகைகளும் கொட்டையினங்களும் ஏராளமான PHYTOCHEMICALS ஐ பெற்றுள்ளன. இவற்றின் பயனை இந்த சிறிய கட்டுரையில் விவரிக்க இயலாது. புற்றுநோயின் தொடக்கமே டி என் ஏ சேதமடைவதுதான். PHYTOCHEICALS டி என் ஏ சேதமடைவதை தடுத்து நிறுத்துகிறது. மேலும் பருப்பு வகைகளும் கொட்டைகளும் ஏராளமான நார்ச்சத்தை பெற்றுள்ளன. குடலில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுப்பதில் நார்ச்சத்து பெரும் பங்கு வகிக்கின்றது. மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் தின்று தீர்க்கும் மேல் நாட்டவர்கள் நார்ச்சத்துள்ள பருப்பு வகைகளையும் கொட்டைகளையும் சுவையாக சமைப்பது எப்படி என்பதை இந்தியர்களின் சமையலறைகளில் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

5. பச்சைத்தேயிலையில் EPIGALLOCATECHIN GALLATE (EGCG) மற்றும் CATECHINS ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில்கூட தவறில்லை. தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும்போது பயனுள்ள வேதிப்பொருளான CATECHINS ஐ இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையே நமது நண்பன்.

6. மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் இவற்றை எதிர்த்து போரிடுவதில் வைட்டமின் டி பெரும்பங்காற்றுகிறது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும் வைட்டமின் டி யின் பங்கு அளப்பரியது. முட்டைகள், புற ஊதாக்கதிர்களால் செறிவூட்டப்பட்ட காளான், சூரிய ஒளி இவற்றில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. CATFISH, SALMON, SARDINES, MACKEREL ஆகிய மீன் வகைகளும் வைட்டமின் டி ஐ வாரி வழங்கக்கூடியவை.

7. பசுமையான காய்கறிகள், கொட்டைகள், பட்டாணி, பயறுவகைகள் இவற்றிலெல்லாம் அதிக அளவில் ஃபோலேட்டுகள் உள்ளன. பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச்சேர்ந்த ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி 9 இவை அடங்கிய ஃபோலேட்டுகள் புற்றுநோயைத் தடுப்பதில்லை. மாறாக, ஃபோலேட்டுகள் இல்லாத உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

8. முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு எதிரெதிர் இலைகொண்ட காய்கறிகளுக்கு புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம். DINDOLYLMETHANE, SULFORAPHANE, SELENIUM ஆகிய வேதிப்பொருட்கள் இந்தவகையான காய்கறிகளில் அடங்கியுள்ளன. இவற்றை மென்று சுவைத்து சாப்பிடுவதால் கூடுதல் பலன் கிட்டும். நாம் வழக்கமாக இந்த வகை காய்கறிகளை வேகவைத்தே சாப்பிடுகிறோம். நுண்ணிய துண்டுகளாக்கி மென்று தின்பது பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

9. அடர்த்தியான பச்சைநிற காய்கறிகளில் BETA-CAROTENE, LUTEIN AND ZEAXANTHIN ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோயை தொடக்கநிலையிலேயே தடுத்து நிறுத்தும் தன்மையுடைய வலிமையான ANTIOXIDANTS ஆகும். மேலும் இத்தகைய காய்கறிகளில் ஃபோலேட்டுகளும் அடங்கியுள்ளன. இந்த வகையான காயகறிகளின் பசுமையான இலைகளும், சிவந்த வேர்ப்பாகமும் மிகுந்த பயனளிக்கவல்லவை.

10. சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் RESVERATROL என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள். இந்த பத்துவகையான உணவுப்பொருட்களையும் கலந்து கொழுப்பு இல்லாத யோகார்ட்டுடன் கலந்து சாப்பிடுவது நாவிற்கு மட்டும் ருசியானது அல்ல. நோயற்ற வாழ்விற்கும் சுவை கூட்டவல்லது என்பது வல்லுநர்களின் கருத்து.

http://www.livescience.com/health/cancer-fighting-foods-diet-nutrition-100812.html

18 ஜூலை 2011

''மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருங்க...''

ங்குச் சந்தை முதலீடு என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. இதில், புள்ளிகள் தடாலடியாக இறங்கி, போட்ட முதலீடு கணிசமாக கரையும்போது பலருக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும். அதைத் தாங்கிக்கொள்ளும் விதமாக நம் உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம்.

பக்குவத்துக்கான வழி சொல்கிறார் இதய சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம்.

''மனிதனின் மனமே அவனை வாழ வைக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐம்புலன்களின் உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்று, எண்ணங்களாக மாற்றி ஒருவரை அறிவுடையவனாக மாற்றுவது மனதின் செயலாக இருக்கிறது. இந்த மனம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவை உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவைகளாக இருக்கின்றன. மனதின் தன்மைதான் ஆளுமை என்கிற பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்கிறது.

மனிதர்கள் பலவித குணங்களைக் கொண்டவர்கள். ஒரு வகையினர் எதிலும் தீவிரம் மற்றும் கோபம் கொள்பவர்கள். அடுத்த வகையினர் தங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், எண்ணங்களை வெளிப்படுத்தாதவர்களாக - முகமூடி அணிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிரிவில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். அடுத்து அறிவு, பதவி, பணம் படைத்திருந்தும் மன அழுத்தம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று வகையாக இருக்கக்கூடாது!'' எனச் சொல்லும் சொக்கலிங்கம், அப்படிபட்டவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் விளக்குகிறார்.

''இந்த மூன்று வகையினருக்கும் உயர் ரத்த அழுத்தம் (ரத்தக் கொதிப்பு), ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் (நீரிழிவு) அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு உருவாகும் மன அழுத்தம் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இந்தப் பாதிப்பு இருப்பவர்கள் நெய், முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், மூளை போன்ற கொலஸ்ட்ரால் அதிகம் கொண்டவற்றை சாப்பிடவில்லை என்றாலும், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். காரணம், மன அழுத்தம் காரணமாக கொலஸ்ட்ராலை கல்லீரல் தானே உற்பத்தி செய்துவிடும். இது போன்ற பாதிப்பு உள்ளவர்களைத்தான் திடீர் அதிர்ச்சி அதிகமாக பாதிக்கிறது.

அதிர்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு. அதிர்ச்சியால் இதயம் மற்றும் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகிறது. எக்காரணம் கொண்டும் மன அழுத்தம் ஏற்படக்கூடாது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதயத் துடிப்பு வழக்கமாக 70-லிருந்து படிப்படியாக 100, 120 என அதிகரித்து 200-ஐ கூடத் தாண்டக் கூடும். மேலும், ரத்த அழுத்தமும் கூடிவிடும். அதாவது, மன அழுத்தத்தின் மூலம் உருவாகும் கொலஸ்ட்ரால் அனைத்தையும் அதிகரித்து மனிதனை ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சிகரெட், பீடி, மதுபானங்களில் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணுவது மாயை! இப்போது 20-25 வயது இந்திய இளைஞர்களைக்கூட மாரடைப்பு அதிகம் தாக்குகிறது. இது அமெரிக்கர்களை விட 4 மடங்கு, சீனாவைவிட 10 மடங்கு, ஜப்பானைவிட 20 மடங்கு அதிக பாதிப்பாகும். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள்!

மாரடைப்பைத் தடுக்க மன மகிழ்ச்சி முக்கியம். மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியைக் கைவிடக் கூடாது. வெற்றி அடைவது என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி. ஆனால், உண்மையில் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் வெற்றி.

தொழிலை சுமையாக நினைக்கக்கூடாது. 20 மணி நேரம் மன மகிழ்ச்சியுடன் வேலை பார்த்தாலும் பாதிப்பு இருக்காது. இதையே கஷ்டப்பட்டு 2 மணி நேரம் சுமையாக நினைத்து வேலை பார்த்தால் இதய பாதிப்பு நிச்சயம் வரும்.

மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி ஏற்படும்போது இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேக வேகமாக சுருங்கி விரியும். அப்போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது. மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேகமாக சுருங்கி விரியும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.

மேலும், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் வரவும் மன அழுத்தம் காரணமாக இருக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க தியானமும் யோகாசனமும் நல்ல வழிகள். உடம்பில் எல்லா உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுப்பது யோகாசனம். மூளைக்கு வலிமை சேர்ப்பது தியானம்.

மன அழுத்தம் மற்றும் மன அதிர்ச்சி இல்லாமல் உலகில் யாரும் வாழ முடியாது. பாசிடிவ் ஆக நினைக்கும்போது மூளை என்டாக்ரின் மற்றும் மெலட்டோனின் ஆகிய திரவங்களையும் கல்லீரல் நல்ல கொழுப்பையும் அதிக அளவில் சுரந்துவிடும். மன அதிர்ச்சி ஏற்படும்போது அதை உடல் தாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம். குறிப்பாக, நடை பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். புகைப்பது மட்டும் அல்ல, புகைப்பவர் அருகில்கூட இருக்கவேண்டாம். வாழ்க்கை என்பது இனிய பயணம். அது பந்தயம் அல்ல. பந்தயம் என்றால் போட்டி பொறாமை வந்துவிடும். பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்கள், டிரேடர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அதிகமாக உடல் உழைப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

100 வருடங்கள் வாழ ஒரு மனிதன் வருடத்துக்கு 100 மணி நேரம் யோகாசனம், உடற்பயிற்சி செய்தால் போதும். அதாவது தினசரி 15-20 நிமிடம் இவற்றை மேற்கொண்டால் போதும். ரத்த அழுத்தம் 100-ஐ தாண்டாது. சர்க்கரை அளவு 100, கொலஸ்ட்ரால் அளவு 100-ஐ தாண்டாது. 100 வயதைத் தாண்டி வாழ வேண்டும் என்றால் உடம்பிலும் பாரம் இருக்கக் கூடாது. மனதிலும் பாரம் இருக்கக் கூடாது!'' - முத்தாய்ப்பாக முடிக்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.

- சி.சரவணன்

thanks to dr.vikadan

14 ஜூலை 2011

மாதுளையின் மகத்துவம்!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது மாதுளம் பழம். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற பழமாக விளங்கும் மாதுளம் பழத்தின் சாறு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாதுளம் பழச்சாறு தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுப்படும் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதய நோயாளிகளுக்கும் நல்லது என்றும் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி மாதுளம்பழம், ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகவும் செயல்படுகிறது என்றும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது.

சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மாதுளம் பழச்சாறு கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில்
, மாதுளம் பழச்சாறு குடித்த நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் மட்டுமின்றி, ஒட்டு மொத்த உடல் பாதுகாப்பு கிடைத்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கற்ப மூலிகை - கரிசலாங்கண்ணி

மூலிகைகள் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. ஒவ்வொரு மூலிகையும் ஒரு வித மருத்துவத் தன்மையுடன் காணப்படும். இந்த மூலிகைகள் அனைத்தும் இயற்கை அன்னையின் கொடையே. மூலிகைகளின் சொர்க்க பூமியாக கருதப்படும் ஆசிய கண்டத்தில்தான் பல மருத்துவ முறைகள் தோன்றின. குறிப்பாக இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையில் வளரும் மூலிகைகள் மருத்துவக் குணம் மிகுந்தவையாக இருக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மூலிகைகளுள் மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் காமதேனு தான் கற்ப மூலிகைகள். உடலை நோய் அணுகாதபடி காத்து என்றும் இளமையுடனும், புத்துணர்வுடனும் திளைக்கச் செய்யும் மூலிகைகள் இவையே. இந்த மூலிகைகளுள் கரிசலாங்கண்ணிக்கு சிறப்பிடம் உண்டு.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட பல்லவர் காலத்தில் கரிசலாங்கண்ணி பயிரிட மக்கள் அரசிடம் அனுமதி வாங்கி வந்துள்ளனர். இந்த கரிசலாங்கண்ணி பயிரிட்டு வளர்த்து, விற்று கண்ணிக்காணம் என்ற வரி செலுத்தி வந்துள்ளனர். இது பற்றி பல்லவர் கால செப்பேடுகள் தெரிவிக்கின்றன. ஏன் கரிசலாங்கண்ணியை பயிரிட வரி வாங்கினார்கள் என்றால், இது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மருந்தாக இருந்து வந்துள்ளது.

மேலும் இதில் இரும்புச்சத்தும், தாமிரச் சத்தும் நிறைந்துள்ளது.

இயற்கையின் கொடையான இந்த கரிசலாங்கண்ணி எத்தகைய மருத்துவக் குணம் கொண்டது என்பதை இதிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம்.

கரிசலாங்கண்ணிக்கு கரிசாலை, கைகேசி, கையாந்தரை, தேகராசம் என பல பெயர்கள் உண்டு. இதில் மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என இருவகை உண்டு.

வெள்ளை கரிசலாங்கண்ணி இரும்புச்சத்து அதிகம் கொண்டவை. மஞ்சள் கரிசலாங் கண்ணி தாமிரச் சத்து அதிகம் கொண்டவை. தமிழ் மருத்துவத்தில் வெள்ளை கரிசலாங் கண்ணியே அதிகம் பயன்படுத்தப் படுகிறது.

குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை யுறற்பாண்டு பன்னோ யொழிய- நிரச்சொன்ன மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்து கையாற் தகரையொத்தக் கால் -அகத்தியர் குணபாடம்

பொருள் - குரலறுப்பு நோய், காமாலை, குட்டம், வீக்கம், பாண்டு, பல்நோய் ஆகியவற்றை போக்கும் உடலுக்கு பொற்சாயலைக் கொடுக்கும். உடலுக்கு பலம் கொடுக்கும்.

இரும்புச்சத்து அதிகமுள்ள மூலிகைகளில் கரிசலாங்கண்ணியும் ஒன்று.

இரத்த சோகை நீங்க

உடலின் இரும்புச் சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து போகும். இதனால் உடல் சோர்வடையும். இரத்த சோகை மனிதர்களை ஆட்டிப்படைக்கும் ஒருகொடிய நோயாகும். இந்த ரத்த சோகை மற்ற நோய்களுக்கு நுழைவு வாசலாகவும் அமையும். இரத்த சோகையுள்ளவர்கள் கரிசலாங் கண்ணியை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். இதனால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்தச் சோகை நீங்கும்.

கல்லீரல் பலப்பட

உடலின் செயல்பாடுகளை தூண்டுவதும், செயல் படுத்துவதும் கல்லீரலின் முக்கிய பணியாகும். கல்லீரல் நன்கு செயல்பட்டால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். மது பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் எளிதில் பாதிப்படையும். இதனால் இவர்களின் கண்கள், மூளை, உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிப்பால் உடலில் பித்தம் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்துவிடுவதால் காமாலை நோய் உண்டாகிறது. கல்லீரல் பாதிப்பே உடலின் பாதிப்பாகும். கல்லீரலைப் பலப்படுத்த கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.

கரிசலாங்கண்ணியின் சமூலத்தை (இலை, வேர், காய், பூ) நிழலில் உலர்த்தி பொடித்து அதனை கஷாயம் செய்தோ அல்லது தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதிப்பு குறையும். தற்போது சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கரிசலாங்கண்ணி மாத்திரை கிடைக்கிறது. பல ஆங்கில மருத்துவர்களும் இதை பரிந்துரைக்கின்றனர்.

காமாலை வந்தால் காலனுக்கு கொண்டாட்டம் என்பார்கள். அந்த காலனை விரட்டி, காமாலையை அகற்ற கரிசலாங்கண்ணி சிறந்த மருந்து.

இரத்தத்தை சுத்தப்படுத்த

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.

கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத் தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.

கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும்.

ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும்.

மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு.

குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்த நோய்களைப் போக்கும்.

கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.

தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையேகண் மைஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர். இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். கண்ணுக்கு மை அழகு என்ற பழமொழி, அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கயத்துக்கும் சிறந்ததாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்.

ஞாபக சக்தியைத் தூண்ட

கரிசலாங்கண்ணி பொடி - 50 கிராம் திரிபலா பொடி - 50 கிராம் பிரம்மி பொடி - 50 கிராம் வல்லாரை - 50 கிராம் கீழாநெல்லி - 50 கிராம்

எடுத்து பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

முடி உதிர்வதைத் தடுக்க

கரிசலாங்கண்ணி தலை முடியை கருமையாக்கும். முடி உதிர்வதைத் தடுக்கும்.

கரிசாலைச்சாறு - 250 மி.கி. கறிவேப்பிலை சாறு - 100 மி.கி. மருதோன்றிச் சாறு - 10 மி.கி. ராமிச்சம் - 10 கிராம் கார்கோல் - 10 கிராம் கருஞ்சீரகம் - 10 கிராம் சீரகம் - 5 கிராம் செம்பருத்திப் பூ - 10 கிராம் (உலராத)

இவற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து வந்தால், உடல் சூடு குறையும். முடி கறுமையாகும். கூந்தல் நீண்டு வளரும்.

நன்றி-ஹெல்த் சாய்ஸ்

அதிர்ச்சி ரிப்போர்ட்! சிக்கன் 65!!

ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.

இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.

உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.

கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு? கேன்சர் ஆபத்து!

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்