19 ஜூலை 2012

வீட்டுக்கு ஒரு வேம்பு!

வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.

வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.

வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

03 ஜூலை 2012

சிறுநீர் கசிவு

திருமணமான பெண்களை வயது வித்தியாசமின்றி பாதிக்கிற ஒரு பிரச்னை, சிறுநீரை அடக்க முடியாமை! குறிப்பாக சுகப்பிரசவம் நிகழும் பெண்களிடம் இது சகஜம். குழந்தை பிறந்த பிறகு சாதாரணமாக சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ கூட சிறுநீர் கசிய ஆரம்பிக்கும். இதற்குப் பயந்து கொண்டே, பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, ஒரு சின்ன வட்டத்துக்குள் தம்மை சுருக்கிக்கொண்டு, மன தளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். 

இந்தப் பிரச்னைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விவரமாகப் பேசுகிறார் சிறுநீர் கசிவு மற்றும் மகளிர் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.

‘‘இடுப்பெலும்பைச் சுத்தியுள்ள தசைகளோட பலவீனம்தான் இந்தப் பிரச்னைக்கான பிரதான காரணம். பெண்களோட உடம்புல உள்ள மற்ற தசைகளைப் போல இல்லாம, இந்த இடுப்பெலும்புத் தசைகள் எப்போதும் டென்ஷன்லயே இருக்கக்கூடியவை. சிறுநீர் வெளியேறி, சிறுநீர்பை காலியானதும்தான், அந்தத் தசைகள் ரிலாக்ஸ் ஆகும். 

இருமல், தும்மல் வரும் போது, சட்டுனு சுருங்கிக்கிற குணமும், குழந்தைப் பிறப்பின் போது, குழந்தையை வெளியேற்றும் அளவுக்கு விரிஞ்சு கொடுத்து, பிறகு மறுபடி பழைய நிலைக்குத் திரும்பற சக்தியும் கொண்டது இது. இந்தத் தசைகளுக்கு ஏதாவது பாதிப்பு வரும் போதுதான், சிறுநீரை அடக்க முடியாமை, கர்ப்பப்பை இறக்கம், அந்தரங்க உறுப்புகளில் வலியெல்லாம் வரலாம். 

கர்ப்பத்தின் போது, குழந்தையின் எடை அழுத்துவதால், இடுப்பெலும்புத் தசைகளைச் சுற்றியுள்ள பகுதிகளும், நரம்புகளும் பாதிக்கப்படலாம். பொதுவாக 6 வாரங்களுக்குள் அந்த பாதிப்பு தானாக சரியாகி விடும். அரிதாக சிலருக்கு அது நிரந்தர பாதிப்பாகவும் நின்று விடுவதுண்டு. இந்த பாதிப்புகளில் முக்கியமான சிறுநீரை அடக்க முடியாத பிரச்னைக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் முழுமையான தீர்வுகள் உண்டு. 

சிறுநீர் கசிவுப் பிரச்னையின் ஆரம்ப நிலையில் ‘கெகல்’ என்கிற பயிற்சிகள் பிரமாதமாக பலனளிக்கக் கூடியவை. அந்தரங்க உறுப்பையும் சிறுநீர் பாதையையும் சுருக்கி, கட்டுப்படுத்துகிற பயிற்சி இது. செலவில்லாத இந்தப் பயிற்சியை பெண்கள் யாருக்கும் தெரியாமல் எந்த இடத்தில் இருந்த 
படியேவும், உட்கார்ந்துகிட்டோ, நிற்கும்போதோ, படுத்தபடியோ செய்யலாம். 

மேலே சொன்ன பகுதியைச் சுருக்கி, 5 வரை எண்ணி பிறகு ரிலீஸ் செய்யலாம். இதை தினசரி ஒரு பயிற்சியாகவே பழக்கப்படுத்திக்கணும். ‘ஷ்வெஜைனல் கோன்ஸ்’னு சொல்லப்படற பிரத்யேக கருவிகளும் இப்போ கிடைக்குது. மருத்துவரோட ஆலோசனையின் படி, மேலே சொன்ன ‘கெகல்’ பயிற்சிகளின் போது, இதை உபயோகிச்சா, கூடுதல் பலன் கிடைக்கும்.’’

கிரீம் வேண்டாம்;தண்ணீர் குடிங்க!

கிரீம் வேண்டாம்;தண்ணீர் குடிங்க!

இளமையாக இருப்பது குறித்து, இயற்கை மருத்துவர் சிவராமன்: "ஸ்கின் டிரை ஆகுதுப்பா... நீ என்ன கிரீம் யூஸ் பண்ற...?' என, குளிர்பானத்தை உறிஞ்சுக் கொண்டே கேட்கும் யுவதிக்கு, தான் உறிஞ்சும் குளிர்பானமே, தன் வயதை உறிஞ்சும் என்பது தெரியவில்லை.

"காலையில் சாப்பாட்டுக்கு முன், ஒரு வருடம், மாலையில் சாப்பாட்டுக்கு அப்புறம், ஒரு வருடம், இந்த மருந்தை சாப்பிட்டால் போதும்...' என, யாராவது, உங்கள் வயதைக் குறைக்கிறேன்னு சொன்னால் நம்ப வேண்டாம். அக்மார்க், டுபாக்கூர் மாத்திரை வியாபாரம் மட்டுமே அது. மருந்து மாத்திரையால், வயதைக் குறைக்க முடியாது; வாலிபத்தை மீட்க முடியாது.

ஆனால், உணவால் இளமையை இழக்காமல் வைத்திருக்க முடியும். தண்ணீரைச் சுட வைத்து, ஆற வைத்து, தினசரி நாலைந்து லிட்டர் குடித்தாலே போதும். தோலின் ஈரத் தன்மை போகாது இருக்க அது உதவும். உடல் செல்லின் வளர்சிதை மாற்றத்தில், ஒவ்வொரு செல்லும், ஆரோக்கியத்துடன், உத்வேகத்துடன் திகழ, போதுமான நீர்ச் சத்து அவசியம். ஆதலால், இளமையாய் இருக்க, போதுமான தண்ணீர் குடியுங்கள்.

காலையில், நவதானியக் கஞ்சி, வரகரிசிப் பொங்கல், ராகி இட்லி என, சிறுதானியம் நிறைந்த உணவு சாப்பிடுங்கள். ஒவ்வொரு வேளை உணவிலும், சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெந்தயம் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த சமாச்சாரமெல்லாம், வாசனை தருவது மட்டுமல்ல; வயசும் தரும்.அடுத்து, வயதாவதைத் தடுக்கும் உணவில், முதலிடம், பழங்களுக்குத் தான். நெல்லியில் உள்ள பாலிபீனால்கள், வைட்டமின் சி, இன்னும் சில நுண்ணிய துவர்ப்பிகள் எல்லாம், வயோதிக மாற்றத்தைத் தடுப்பதை, மருத்துவம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

அதேபோல், கொட்டையுள்ள பன்னீர் திராட்சை, மாதுளை, சிவப்புக் கொய்யா, அத்தி, அவகாடோ, சிவப்பு ஆப்பிள் இவையெல்லாம், இளமைக்கு வித்திடும் உணவுகள். வயதாவதைக் காட்டிக் கொடுக்கும் முகச் சுருக்கம், கண்ணுக்கு கீழான கருவளையம், தோல் சுருக்கம், வறட்சி நீங்க அல்லது வராமல் தடுக்க, தினம், ஒரு வேளை பழம் சாப்பிடுங்கள்; பொலிவு பொங்கும்.