02 ஜனவரி 2014

இதயத்தை காக்கும் மூலிகை!

 -இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோ‌ய்க‌ள் வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே இதய நோ‌ய் வந்தவர்களும் இந்த இதழ்களை சாப்பிட்டு வந்தாலும் நோயின் பாதிப்பு மெல்ல மெல்ல குறையும். இதய நோ‌ய் தீவிரமாக இருப்பவர்க‌ள் செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து அதன்மீது எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பாகு பதத்தில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக்கொ‌ள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தினமும் காலை கண்விழித்ததும் அருந்தி வந்தால் இதய நோயின் தீவிரத்தை குறைக்கும். மற்றபடி வெறுமனே செம்பருத்திப் பூ இதழ்களை நீர் விட்டு கா‌ய்ச்சி சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தாலும் இதய நோயின் தீவிரம் குறையும். ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை இஞ்சி சரி செ‌ய்கிறது. அந்தவகையில் , இஞ்சிச்சாறு அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தாலும் இதய நோயிலிருந்து உங்களை காத்துக்கொ‌ள்ளலாம். இஞ்சிச்சாறு எனும்போது வெறுமனே அருந்துவதைவிட தண்ணீரும் , தேனும் சேர்த்து அருந்தலாம். இஞ்சி ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்றால் இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் தண்ணீர் , எலுமிச்சைசாறு , தேன் , சர்க்கரை சேர்த்தால் ஜூஸ் ரெடி. இஞ்சியை துவையல் , ஊறுகா‌ய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் இதய நோயை வெல்லலாம். தாமரை மலரின் இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தாலும் இதய நோ‌ய் குணமாகும். உடலில் உ‌ள்ள கொழுப்புச்சத்தை பூண்டு எளிதாக குறைக்கக்கூடியது. தொடர்ந்து 3 மாதங்க‌ள் வெ‌ள்ளைப்பூண்டு சாப்பிட்டு வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். பொதுவாக வெ‌ள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட வேக வைத்தோ , தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது. தாமரை இலையை கஷாயம் செ‌ய்து குடித்து வந்தால் இதய படபடப்பு , மேல் சுவாசம் , படபடப்பு சரியாகும். சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் இதயம் பலப்படும். தொடர்ந்து 7 நாட்க‌ள் செ‌ய்து வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.

01 ஜனவரி 2014

விரதமே மகத்தான மருத்துவம்!



இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ''75 வயதிலும் எப்படி இப்படி ஒரு சுறுசுறுப்பு?'' எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் சிரிக்கிறார் நம்மாழ்வார்.

''எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, 'உணவே மருந்து; மருந்தே உணவு’ன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். இந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள்தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.

'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குறோம். ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான், 'நொறுங்கத் தின்றால் நோய் தீரும்!’ எனப் பழமொழியாகச் சொன்னார்கள். அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது. சரி, அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி, உண்ணாநோன்பு. இதைத்தான் 'விரதம்’ என்ற பெயரில் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள். 'நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மா’ எனப் பாடினார்களே... அந்த நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணா நோன்புக்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் 'தெரப்பூட்டிக் பாஸ்ட்டிங்’ (Theraupeutic fasting) என்று சொல்கிறார்கள். இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.

அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நம் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 'வெந்ததைக் குறைத்தால் வேதனையை குறைக்கலாம்’ என்பார்கள். அதாவது வேகவைத்த உணவைக் குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் காரணம் எனது உணவுப் பழக்கங்கள்தான்!'' - விழி விரியவைக்கும் அளவுக்கு ஆச்சரியமாகப் பேசுகிறார் நம்மாழ்வார். அடுத்து, மூலிகைகளை நோக்கி நீள்கிறது பேச்சு.

''இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, பிரண்டை. இதைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்குப் பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, மொசுமொசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி, வெட்டுப் புண்களை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை, அனைத்துக் கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல. நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார், உடலின் மகத்துவத்தையும், யோகாவின் சிறப்பையும் சொல்லத் தொடங்கினார்.

''இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முயற்சி. அதைத் தடுக்கக்கூடாது.

50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது, அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது! அதனால், உடலைப் பராமரிப்பதும் அவசியம். இது இரண்டையும் ஒரே நேரத்தில் பராமரிக்க உதவுவதுதான் யோகா. நான் நீண்ட காலமாக யோகா செய்து வந்தாலும், 'ஈஷா’ பயிற்சியில்தான் அதை முறைப்படுத்தினேன். தினமும் காலையில் நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா செய்கிறேன்.

ஈஷா யோகா பயிற்சியின்போது நடந்த நேர்காணலில், 'யோகா செய்வதன் மூலம் நோய்கள் குணமாகும் என்றால், எதற்காக இத்தனை மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன?’ என சத்குருவிடம் கேட்டேன். 'நாட்டில் தினமும் ஆயிரக் கணக்கில் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்க முடியாது அல்லவா? அவர்களுக்குத் தேவை, அவசர சிகிச்சை. அதற்காகத் தான் மருத்துவர்களும், மருத்துவமனைகளும்!’ என்று அவர் அமைதியாகச் சொன்னார்.

அவர் சொன்னது உண்மைதான். ஆங்கில மருத்துவத்தை அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத்திரை, மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, அதுவே உடம்பில் பல உபத்திரவங்களை உண்டாக்குகிறது.

மொத்தத்தில், சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு 'நோ என்ட்ரி’ போட்டுவிடலாம்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக இப்படிச் சொல்கிறார் வாழ்வியல் மந்திரத்தை.

''கணியன் பூங்குன்றனார் சொன்ன 'தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது. அந்த வரிகளை மனதில் ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்வின் சிறப்புக்குக் குறைவே இருக்காது!''.

- நன்றி சக்தி விகடன்