பாசிப்பயறுக்குப் பயத்தம் பருப்பு பாசிப்பருப்பு என்ற பெயர்களும் மக்கள் வழக்கில் உள்ளன. இது ஒரு வகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்கட்டை உள்ளிட்ட உண் பொருள்கள் இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. முளைக்க வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்க்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் பாசிப்பருப்புப் பாயசம் மிகவும் புகழ் பெற்றது.
பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள்ளன. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். இதில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இப்பயறுகள் ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிகப் புரதம் கிடைத்திடச் செய்யும்.
தொன்று தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களைவிட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகவும் காணப்படுகின்றன. எனவே, இவற்றை எளிதாகப் பல நாள்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை. ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளில்தான் அதிகச் சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு என்றால் அது மிகையல்ல. முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின், மாவுச்சத்து ஆகியவை அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28 சதவிகிதம் புரதச்சத்தும் 60 சதவிகிதம் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. அதிலும் சோயா பயற்றில் 48 சதவிகிதம் புரதமும், 30 சதவிகிதம் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. இது பயறு வகைகளிலேயே அதிகமாகும்.
பயறுகளும், தானியங்களும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றன. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றது. பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையைத் தவிர்த்திடும். பச்சைப் பயறு மற்றும் தட்டைப்பயற்றில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அதை அப்படியே பயன்படுத்துவதைவிட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயற்றில் வாயுத்தன்மையை உண்டு செய்யும் தன்மை கிடையாது. எளிதில் செரிமானமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தறுவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளரக் கூடிக்கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிற்றை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர் வெல்லம் அல்லது சர்க்கரை இட்டும் சாப்பிடலாம். வெந்த பயிற்றைக் கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்.
புன்செய் நிலங்களில் விளையக்கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் செரிமானமாவதும் வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும் தான் காரணம். அறுவடையாகி ஆறு மாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும்.
கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில் செரிமானமாகக் கூடியது.
பயறு பல வகைப்படும். பாசிப்பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு ஆகியவை. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்றபெயரில் குறிப்பிடப்படுபவையாயினும் வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப்பயறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய்.
பச்சைப் பயறு இரண்டு விதமாகப் பயிரிடப்படுகின்றன. புஞ்சைத் தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாள்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சைத் தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும். மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றேறக்குறைய ஒரே குணமுள்ளவைதாம்.
பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் செரிமானமாகக் கூடியது. இரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே இரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.
பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்றபின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
( இனிய திசைகள் – சமுதாய மேம்பாட்டு இதழ் - மே 2015 )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக