03 ஜூலை 2012

கிரீம் வேண்டாம்;தண்ணீர் குடிங்க!

கிரீம் வேண்டாம்;தண்ணீர் குடிங்க!

இளமையாக இருப்பது குறித்து, இயற்கை மருத்துவர் சிவராமன்: "ஸ்கின் டிரை ஆகுதுப்பா... நீ என்ன கிரீம் யூஸ் பண்ற...?' என, குளிர்பானத்தை உறிஞ்சுக் கொண்டே கேட்கும் யுவதிக்கு, தான் உறிஞ்சும் குளிர்பானமே, தன் வயதை உறிஞ்சும் என்பது தெரியவில்லை.

"காலையில் சாப்பாட்டுக்கு முன், ஒரு வருடம், மாலையில் சாப்பாட்டுக்கு அப்புறம், ஒரு வருடம், இந்த மருந்தை சாப்பிட்டால் போதும்...' என, யாராவது, உங்கள் வயதைக் குறைக்கிறேன்னு சொன்னால் நம்ப வேண்டாம். அக்மார்க், டுபாக்கூர் மாத்திரை வியாபாரம் மட்டுமே அது. மருந்து மாத்திரையால், வயதைக் குறைக்க முடியாது; வாலிபத்தை மீட்க முடியாது.

ஆனால், உணவால் இளமையை இழக்காமல் வைத்திருக்க முடியும். தண்ணீரைச் சுட வைத்து, ஆற வைத்து, தினசரி நாலைந்து லிட்டர் குடித்தாலே போதும். தோலின் ஈரத் தன்மை போகாது இருக்க அது உதவும். உடல் செல்லின் வளர்சிதை மாற்றத்தில், ஒவ்வொரு செல்லும், ஆரோக்கியத்துடன், உத்வேகத்துடன் திகழ, போதுமான நீர்ச் சத்து அவசியம். ஆதலால், இளமையாய் இருக்க, போதுமான தண்ணீர் குடியுங்கள்.

காலையில், நவதானியக் கஞ்சி, வரகரிசிப் பொங்கல், ராகி இட்லி என, சிறுதானியம் நிறைந்த உணவு சாப்பிடுங்கள். ஒவ்வொரு வேளை உணவிலும், சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெந்தயம் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த சமாச்சாரமெல்லாம், வாசனை தருவது மட்டுமல்ல; வயசும் தரும்.அடுத்து, வயதாவதைத் தடுக்கும் உணவில், முதலிடம், பழங்களுக்குத் தான். நெல்லியில் உள்ள பாலிபீனால்கள், வைட்டமின் சி, இன்னும் சில நுண்ணிய துவர்ப்பிகள் எல்லாம், வயோதிக மாற்றத்தைத் தடுப்பதை, மருத்துவம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

அதேபோல், கொட்டையுள்ள பன்னீர் திராட்சை, மாதுளை, சிவப்புக் கொய்யா, அத்தி, அவகாடோ, சிவப்பு ஆப்பிள் இவையெல்லாம், இளமைக்கு வித்திடும் உணவுகள். வயதாவதைக் காட்டிக் கொடுக்கும் முகச் சுருக்கம், கண்ணுக்கு கீழான கருவளையம், தோல் சுருக்கம், வறட்சி நீங்க அல்லது வராமல் தடுக்க, தினம், ஒரு வேளை பழம் சாப்பிடுங்கள்; பொலிவு பொங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக