மூலிகைகள் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. ஒவ்வொரு மூலிகையும் ஒரு வித மருத்துவத் தன்மையுடன் காணப்படும். இந்த மூலிகைகள் அனைத்தும் இயற்கை அன்னையின் கொடையே. மூலிகைகளின் சொர்க்க பூமியாக கருதப்படும் ஆசிய கண்டத்தில்தான் பல மருத்துவ முறைகள் தோன்றின. குறிப்பாக இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையில் வளரும் மூலிகைகள் மருத்துவக் குணம் மிகுந்தவையாக இருக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மூலிகைகளுள் மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் காமதேனு தான் கற்ப மூலிகைகள். உடலை நோய் அணுகாதபடி காத்து என்றும் இளமையுடனும், புத்துணர்வுடனும் திளைக்கச் செய்யும் மூலிகைகள் இவையே. இந்த மூலிகைகளுள் கரிசலாங்கண்ணிக்கு சிறப்பிடம் உண்டு.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட பல்லவர் காலத்தில் கரிசலாங்கண்ணி பயிரிட மக்கள் அரசிடம் அனுமதி வாங்கி வந்துள்ளனர். இந்த கரிசலாங்கண்ணி பயிரிட்டு வளர்த்து, விற்று கண்ணிக்காணம் என்ற வரி செலுத்தி வந்துள்ளனர். இது பற்றி பல்லவர் கால செப்பேடுகள் தெரிவிக்கின்றன. ஏன் கரிசலாங்கண்ணியை பயிரிட வரி வாங்கினார்கள் என்றால், இது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மருந்தாக இருந்து வந்துள்ளது.
மேலும் இதில் இரும்புச்சத்தும், தாமிரச் சத்தும் நிறைந்துள்ளது.
இயற்கையின் கொடையான இந்த கரிசலாங்கண்ணி எத்தகைய மருத்துவக் குணம் கொண்டது என்பதை இதிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம்.
கரிசலாங்கண்ணிக்கு கரிசாலை, கைகேசி, கையாந்தரை, தேகராசம் என பல பெயர்கள் உண்டு. இதில் மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என இருவகை உண்டு.
வெள்ளை கரிசலாங்கண்ணி இரும்புச்சத்து அதிகம் கொண்டவை. மஞ்சள் கரிசலாங் கண்ணி தாமிரச் சத்து அதிகம் கொண்டவை. தமிழ் மருத்துவத்தில் வெள்ளை கரிசலாங் கண்ணியே அதிகம் பயன்படுத்தப் படுகிறது.
குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை
யுறற்பாண்டு பன்னோ யொழிய- நிரச்சொன்ன
மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்து
கையாற் தகரையொத்தக் கால்
-அகத்தியர் குணபாடம்
பொருள் - குரலறுப்பு நோய், காமாலை, குட்டம், வீக்கம், பாண்டு, பல்நோய் ஆகியவற்றை போக்கும் உடலுக்கு பொற்சாயலைக் கொடுக்கும். உடலுக்கு பலம் கொடுக்கும்.
இரும்புச்சத்து அதிகமுள்ள மூலிகைகளில் கரிசலாங்கண்ணியும் ஒன்று.
இரத்த சோகை நீங்க
உடலின் இரும்புச் சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து போகும். இதனால் உடல் சோர்வடையும். இரத்த சோகை மனிதர்களை ஆட்டிப்படைக்கும் ஒருகொடிய நோயாகும். இந்த ரத்த சோகை மற்ற நோய்களுக்கு நுழைவு வாசலாகவும் அமையும்.
இரத்த சோகையுள்ளவர்கள் கரிசலாங் கண்ணியை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். இதனால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்தச் சோகை நீங்கும்.
கல்லீரல் பலப்பட
உடலின் செயல்பாடுகளை தூண்டுவதும், செயல் படுத்துவதும் கல்லீரலின் முக்கிய பணியாகும். கல்லீரல் நன்கு செயல்பட்டால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். மது பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் எளிதில் பாதிப்படையும். இதனால் இவர்களின் கண்கள், மூளை, உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிப்பால் உடலில் பித்தம் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்துவிடுவதால் காமாலை நோய் உண்டாகிறது. கல்லீரல் பாதிப்பே உடலின் பாதிப்பாகும். கல்லீரலைப் பலப்படுத்த கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.
கரிசலாங்கண்ணியின் சமூலத்தை (இலை, வேர், காய், பூ) நிழலில் உலர்த்தி பொடித்து அதனை கஷாயம் செய்தோ அல்லது தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதிப்பு குறையும். தற்போது சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கரிசலாங்கண்ணி மாத்திரை கிடைக்கிறது. பல ஆங்கில மருத்துவர்களும் இதை பரிந்துரைக்கின்றனர்.
காமாலை வந்தால் காலனுக்கு கொண்டாட்டம் என்பார்கள். அந்த காலனை விரட்டி, காமாலையை அகற்ற கரிசலாங்கண்ணி சிறந்த மருந்து.
இரத்தத்தை சுத்தப்படுத்த
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.
கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத் தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.
கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும்.
ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும்.
மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு.
குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்த நோய்களைப் போக்கும்.
கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.
கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர். இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். கண்ணுக்கு மை அழகு என்ற பழமொழி, அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கயத்துக்கும் சிறந்ததாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
கரிசலாங்கண்ணி பொடி - 50 கிராம்
திரிபலா பொடி - 50 கிராம்
பிரம்மி பொடி - 50 கிராம்
வல்லாரை - 50 கிராம்
கீழாநெல்லி - 50 கிராம்
எடுத்து பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
முடி உதிர்வதைத் தடுக்க
கரிசலாங்கண்ணி தலை முடியை கருமையாக்கும். முடி உதிர்வதைத் தடுக்கும்.
கரிசாலைச்சாறு - 250 மி.கி.
கறிவேப்பிலை சாறு - 100 மி.கி.
மருதோன்றிச் சாறு - 10 மி.கி.
ராமிச்சம் - 10 கிராம்
கார்கோல் - 10 கிராம்
கருஞ்சீரகம் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
செம்பருத்திப் பூ - 10 கிராம் (உலராத)
இவற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து வந்தால், உடல் சூடு குறையும். முடி கறுமையாகும். கூந்தல் நீண்டு வளரும்.
நன்றி-ஹெல்த் சாய்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக