24 ஜூலை 2011

Cancer-Fighting Foods: Facts and Fiction

புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. இக்கட்டுரையில் பத்துவிதமான உணவுப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து நம்மை காக்கக்கூடியவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1. மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் ELLAGIC ACID மற்றும் POLYPHENOL ANTIOXIDANTS ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்பொருட்கள் உடல் பாகங்களில் கட்டிகள் வளருவதை தடுக்கும் ஆற்றல் உடையவை. உச்சரிக்க இயலாத கனிகளின் பெயர்களை எண்ணி குழப்பமடையத் தேவையில்லை. அந்தந்த பருவங்களில் கிடைக்கக்கூடிய கனிகளை சீராக உண்டு வருவதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

2. சாக்லேட்கள் உடலுக்கு தீங்கானவை என்று மெய்ப்பிக்க எத்தனையோ வல்லுநர்கள் முயன்று தோற்றுப் போயிருக்கிறார்கள். சாக்லேட்டில் உள்ள கோக்கோ, சர்க்கரை இவற்றின் கலவை விகிதம் குறைந்தது 70 சதவீதமாக இருக்குமாயின் சாக்லேட் உடலுக்கு நல்லது. கோக்கோவின் அளவு கூடும்போது சாக்லேட் கருமை நிறமாகவும் கசப்பானதாகவும் இருக்கும். இந்த நிலையில் சாக்லேட்டில் உள்ள ANTIOXIDANTS மற்றும் மருத்துவக்குணமுள்ள POLYPHENOLS ஆகியவை செயல்படக்கூடிய நிலையில் இருக்கும். கோக்கோவில் உள்ள CATECHINS எனும் வேதிப்பொருள் தேயிலையிலும் காணப்படுகிறது. தென் அமெரிக்கர்களின் உணவுப்பழக்கத்தை ஆராய்ந்தபின் இதய நோய்கள், மாரடைப்பு, புற்றுநோய் இவையெல்லாம் CATECHINS வேதிப்பொருளால் தடுத்து நிறுத்தப்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

3. மஞ்சளும், இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள CURCUMIN என்ற வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்துவிடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையல்லாம் சோம்பேறிகளுக்கானவை. மஞ்சளையும் இஞ்சியையும் மருந்துப்பெட்டியில் வைக்கவேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள்.

4. பருப்புவகைகளும் கொட்டையினங்களும் ஏராளமான PHYTOCHEMICALS ஐ பெற்றுள்ளன. இவற்றின் பயனை இந்த சிறிய கட்டுரையில் விவரிக்க இயலாது. புற்றுநோயின் தொடக்கமே டி என் ஏ சேதமடைவதுதான். PHYTOCHEICALS டி என் ஏ சேதமடைவதை தடுத்து நிறுத்துகிறது. மேலும் பருப்பு வகைகளும் கொட்டைகளும் ஏராளமான நார்ச்சத்தை பெற்றுள்ளன. குடலில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுப்பதில் நார்ச்சத்து பெரும் பங்கு வகிக்கின்றது. மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் தின்று தீர்க்கும் மேல் நாட்டவர்கள் நார்ச்சத்துள்ள பருப்பு வகைகளையும் கொட்டைகளையும் சுவையாக சமைப்பது எப்படி என்பதை இந்தியர்களின் சமையலறைகளில் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

5. பச்சைத்தேயிலையில் EPIGALLOCATECHIN GALLATE (EGCG) மற்றும் CATECHINS ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில்கூட தவறில்லை. தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும்போது பயனுள்ள வேதிப்பொருளான CATECHINS ஐ இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையே நமது நண்பன்.

6. மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் இவற்றை எதிர்த்து போரிடுவதில் வைட்டமின் டி பெரும்பங்காற்றுகிறது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும் வைட்டமின் டி யின் பங்கு அளப்பரியது. முட்டைகள், புற ஊதாக்கதிர்களால் செறிவூட்டப்பட்ட காளான், சூரிய ஒளி இவற்றில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. CATFISH, SALMON, SARDINES, MACKEREL ஆகிய மீன் வகைகளும் வைட்டமின் டி ஐ வாரி வழங்கக்கூடியவை.

7. பசுமையான காய்கறிகள், கொட்டைகள், பட்டாணி, பயறுவகைகள் இவற்றிலெல்லாம் அதிக அளவில் ஃபோலேட்டுகள் உள்ளன. பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச்சேர்ந்த ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி 9 இவை அடங்கிய ஃபோலேட்டுகள் புற்றுநோயைத் தடுப்பதில்லை. மாறாக, ஃபோலேட்டுகள் இல்லாத உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

8. முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு எதிரெதிர் இலைகொண்ட காய்கறிகளுக்கு புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம். DINDOLYLMETHANE, SULFORAPHANE, SELENIUM ஆகிய வேதிப்பொருட்கள் இந்தவகையான காய்கறிகளில் அடங்கியுள்ளன. இவற்றை மென்று சுவைத்து சாப்பிடுவதால் கூடுதல் பலன் கிட்டும். நாம் வழக்கமாக இந்த வகை காய்கறிகளை வேகவைத்தே சாப்பிடுகிறோம். நுண்ணிய துண்டுகளாக்கி மென்று தின்பது பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

9. அடர்த்தியான பச்சைநிற காய்கறிகளில் BETA-CAROTENE, LUTEIN AND ZEAXANTHIN ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோயை தொடக்கநிலையிலேயே தடுத்து நிறுத்தும் தன்மையுடைய வலிமையான ANTIOXIDANTS ஆகும். மேலும் இத்தகைய காய்கறிகளில் ஃபோலேட்டுகளும் அடங்கியுள்ளன. இந்த வகையான காயகறிகளின் பசுமையான இலைகளும், சிவந்த வேர்ப்பாகமும் மிகுந்த பயனளிக்கவல்லவை.

10. சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் RESVERATROL என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள். இந்த பத்துவகையான உணவுப்பொருட்களையும் கலந்து கொழுப்பு இல்லாத யோகார்ட்டுடன் கலந்து சாப்பிடுவது நாவிற்கு மட்டும் ருசியானது அல்ல. நோயற்ற வாழ்விற்கும் சுவை கூட்டவல்லது என்பது வல்லுநர்களின் கருத்து.

http://www.livescience.com/health/cancer-fighting-foods-diet-nutrition-100812.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக