10 மார்ச் 2012

மனம் எளிதில் உடைகிறதா!


உங்கள் மனதை மற்றவர்கள் எளிதில் உடைத்து விடுகிறார்களா? தினமும் யாரோ ஒருவரால் கவலையை சுமந்து திரிகிறீர்களா? அடிக்கடி வருத்தங்களையும், அவமானங்களையும் சந்திக்கிறீர்களா? எதையும் சந்திக்க வேண்டிய திட மனது உங்களிடம் இல்லையா? அப்படியென்றால் உங்களைப் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

எதிலும் உறுதியான பிடிப்பு இல்லை, உங்களுக்கென்று சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, அனேக அவமானங்களையும், ஏமாற்றங்களையும் அதிகமாக சந்திக்கிறீர்கள், மனம் வெறுமையாக கிடக்கிறது அதில் எதை வைத்து அனுபவிப்பது என்றே தெரியவில்லை, யாரும் உங்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, என்னடா வாழ்க்கை, நான் சபிக்கப்பட்டவன், சாபம் நிறைந்து வாழ்கிறேன் என்ன செய்வதென்றே தெரியவில்லை

இதுதான் உங்கள் ஜாதகம் உங்களை பற்றி நீங்கள் இப்படிதான் நினைக்கிறீர்கள், தன்னை பற்றிய தாழ்வான எண்ணங்களே மனபலஹீனத்திற்கு முக்கிய காரணமாகும். வாழ்க்கையில் நடக்கும் ஒரு நடைமுறை உண்மை உங்களுக்கு தெரியுமா! கஸ்ட்டப் படுகிறவனைதான் திரும்பவும் கஸ்ட்டங்கள் வந்து ஒட்டிக் கொள்ளும், ஏனைன்றால் அவன் தன்னை தரித்திரன் என்றே எண்ணி விடுகிறான், அவன் எண்ணங்களே தவறாமல் மீண்டும் துன்பத்தை அள்ளி கொடுத்து விடுகிறது.

நீங்களும் அறியாத குழந்தையாக இருந்தபோதே நடந்த சின்ன சம்பவங்களை அழுகையாக, சோகமாக நினைத்து பிஞ்சிலேயே ஒடிந்து விழுந்து கிடக்கிறீர்கள் மீண்டும் நிமிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப நான் பாவ பிறவி என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் எண்ணப்படியே நீங்களும் தவறாமல் பாவப்பிறவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் புதிய எண்ணங்களை விதையுங்கள், சபிக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை புரட்டிப் போட்டு அதன் மறுபுறத்தில் ஏறி உட்க்காருங்கள்.

பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒரே மனத்திடத்தோடு பிறப்பதில்லை, சிறு பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை கவனியுங்கள் இரண்டு மூன்று பிள்ளைகள் ஒன்றாக கூடி பேசிக்கொண்டே போவார்கள் ஒரு குழந்தை மட்டும் அவர்களோடு ஒட்டாமல் சற்று விலகிச் செல்லும், சின்னவர், பெரியவர் என்றில்லாமல், ஒவ்வொருவரின் குணாதிசயமும் வேறு வேறாகவே இருக்கிறது, எனவே நான் மட்டும்தான் இப்படி என்று நினைக்காதீர்கள், இல்லாத திடத்தை நிச்சயம் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஐயோ என்ன வாழ்க்கை இது என்று கதறி கொண்டிருப்பவர்களைப் பார்த்து இவர்களும் நம்மை போன்றவர்கள்தான் என்று துணைக்கு அவர்ளை ஒட்டிக் கொள்ளாதீர்கள், சிறிது சிறிதாக மகிழ்ச்சியான, தைரியமான சூழலுக்கு, புதுமையான எண்ணங்களுக்கு உங்களை பழக்கிக் கொள்ளுங்கள், மாற்றங்கள் நிறைந்த சூழலுங்கு உங்கள் மூளையை பழக்கி விடுங்கள், மூளையானது நெகிழ்வு தன்மையுடையது நீங்கள் விரும்பும் சூழலுக்கு அதை தயார் படுத்தி வைக்க முயும்.

உங்கள் பலஹீனங்களை பார்த்து யாரேனும் உங்களை அவர்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடும், அடிமைப் படுத்தி வைக்க கூடும், இன்னும் அந்த அடிமைத்தனத்தை தொடராதீர்கள் அவைகளை மறுத்து விடுங்கள், முதலில் உங்களை வெறுப்பார்கள், வெறுக்கட்டும், முதலில் கெட்ட பெயர்தான் கிடைக்கும், கிடைக்கட்டும், சில நாட்களுக்கு பிறகு அவனா! அவன் அப்படிதான் என்று உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.

எனவே வேண்டாத தாழ்வான எண்ணங்களை தொலைத்து, எதையும் எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தை வளர்த்து மனதை உறுதியாக நிலைநிறுத்தி வையுங்கள், கவலைகளை மறந்து, துணிவான எண்ணங்களை வளர்க்க ஆரம்பித்தீர்களானால், இதுவரை பட்ட வேதனைகளும், அவமானங்களும் மீண்டும் சோதனையை ஏற்படுத்தாமல், உறுதியை, தைரியத்தை, துணிச்சலையே கற்றுத்தரும் வாழ்க்கையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக