07 மார்ச் 2012

உடலுக்கு பொலிவு தரும் வாழைப்பழம், தேன் !

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்திலும், உடலிலும் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. அன்றாடம் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக பயன்படுகின்றன.

அழகாக்கும் தானிய உமி

கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன. வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன. முகத்திற்கு இளமையும், பளபளப்பும் கூட்டுகின்றன. சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன. வைட்டமின் இ சத்து சருமத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. தினசரி உணவில் சிறிதளவு கோதுமையை சேர்த்துக்கொண்டால் சருமம் பளபளப்பாகும்.

ஆலிவ், தேங்காய் எண்ணெய்

ஆலிவ் ஆயிலை முகத்தில், கை, கால்களில் பூசி வர சருமம் பள பளப்பாகும். தேங்காய் எண்ணெயும், பொலிவிற்கு ஏற்றது. அடிக்கடி சில மணி நேர இடைவெளியில் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி வர முகம் புத்துணர்சியுடன் திகழும். ஆலிவ் எண்ணெயுடன், முட்டை வெள்ளைக் கரு,எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல போடவும். பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளிச் தோற்றம் தரும்.

கேரட், பீட்ரூட் மற்றும் செலரி ஆகியவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள முகம் இளமைப் பொலிவுடன் திகழும் முதுமைத் தோற்றம் எட்டிப்பார்க்காது.

விளக்கெண்ணெய் மகத்துவம்

இரவு நேரங்களில் முகம் , கை, கால் முட்டிகளில் விளக்கெண்ணெய் தடவிவைத்து காலையில் வெது வெதுப்பான நீரில் குளிக்க வறண்ட தன்மை நீங்கும். சருமம் மென்மையாகும்.

தேன், வாழைப்பழம்

குளிர் காலமோ, கோடை காலமோ சருமத்தில் பளிச் தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவு தரும்.

பளிச் பற்கள்

சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும். எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பற்களில் தேய்த்து வர மஞ்சள் தன்மை மறைந்து பற்கள் பளிச் தோற்றம் தரும்.

எண்ணெய் பசை நீக்கும்

இது ஒரு வகை மென்மையான, களிமண் வகையைச் சேர்ந்த மண். இது சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்ச் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்திற்கும், கேசத்திற்கும் இம்மண் பவுடர், அழுக்கு நீக்கியாகவும், அதிக எண்ணெய்ப் பசையை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் தரக் கூடியது. கேசத்தினையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனினும் அதிகப்படியான தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரும வறட்சி ஏற்படும். இதிலுள்ள தாது உப்புகள், வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டத்தையும் இளமையையும் தருகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதனை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்தால் கண்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும், கருவளையம் நீங்கும். இதேபோல் உருளைக் கிழங்களை வட்டமாக நறுக்கி முகத்தில் தேய்க்க கரும்புள்ளிகள் நீங்கும், கருவளையம் போகும். துளசி இலை, கற்பூரம் ஆகியவற்றை அரைத்து, முகத்தில் பூசலாம். புதினாவை அரைத்து, அத்துடன் அரை மூடி எலுமிச்சை பழச் சாறு கலந்து முகத்தில் பூச, முகம் பொலிவடையும்.

முதலில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனம் நன்றாக இருந்தால் புன்னகை முகத்தோடு அனைவரையும் வசீகரிக்கும் முகமாக அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். அனைத்தையும் விட முக்கியமானது தினசரி சராசரியாக 7 மணி நேரம் தூங்குவது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் முகம் அழகாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக