10 மார்ச் 2012

மன அமைதி பெறுங்கள்

உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகளை கடைபிடித்தல் அவசியமாகிறது, நமக்கு தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது மனதின் அமைதியை கெடுக்கும், யாருடைய சொந்த வாழ்வையும் நீங்களாகவே ஆராய முயலாதீர்கள், நீங்கள் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் உங்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும் அது உங்கள் அமைதியை கெடுத்து விடும். 

சிறிய தீங்குகளை பொருட்படுத்தாமல் அவர்களை மன்னித்து விடுங்கள், சகிக்க முடிந்த அளவு சகித்துக் கொள்ளுங்கள், கோபத்தை துணைக்கு அழைப்பதை விட்டு, சரி போகட்டும் இனிமே இப்படி செய்து விடாதே என்று சொல்லி மன்னித்து விடுங்கள், கோபம் கொள்வதால் தூக்கமின்மை, ரத்த அழுத்தம் போன்றவைகள் ஏற்படலாம், தூக்கம் இழந்தாலே கூடவே அமைதியையும் இழந்து விடுவீர்கள்

யாருடைய அங்கீகாரத்தையும், வீண் மரியாதையும் எதிர்பாராதீர்கள், உங்களை வைத்து எதையாவது நிறைவேற்ற போலி மரியாதையை கொடுப்பவர்கள் அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது உங்களை அலட்சியப் படுத்துவார்கள், நீங்கள் அங்கீகாரத்தை எதிர்பாராத போது அலட்சியங்கள் உங்கள் அமைதியை சீர்குலைக்காது

உங்களுக்கு கிடைக்காத வசதிகளும், பட்டங்களும் அக்கம் பக்கத்தாருக்கோ, உடன் பணிபுரிபவர்களுக்கோ, கிடைத்து விட்டால் பொறாமையடையாதீர்கள், ஒருவன் கார் வாங்கினான் என்றால் அவன் வசதியை நினைக்காதீர்கள் அந்த காரை தயாரித்து லட்ச கணக்கில் விற்கிறானே அவன் வசதியை நினையுங்கள், அப்போது, அல்ப்பம் ஒரு கார் வைத்திருப்பவன் மீது பொறாமை ஏற்படாது

உங்களை சுற்றியிருப்பவைகள் உங்களுக்கு ஒத்துவரவில்லையெனில் அவைகளை மாற்றியமைக்க முயலாதீர்கள், அவைகளுக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். சில விஷயங்களில் நெகிழ்வுத் தன்மையுடன் வளைந்து கொடுப்பதால் அமைதியை இழக்காமல் வைத்திருக்க முடியும்.

தினசரி வாழ்வில் எதிர்பாராத விதமாக, விபத்துகள், நோய்கள், இயற்கை உபாதைகள் போன்றவைகளை சந்திக்க நேரிடும் எப்படியும் நடந்தே தீரக்கூடியவைகள் இப்படி உங்களால் மாற்ற முடியாதவைகளையும் எதிர்கொள்ள உங்களை தாயார் படுத்தி வைத்திருங்கள்

பிறரிலிருந்து உங்களை வேறுபடுத்தி காட்டவோ, பிறரின் பாராட்டுதலுக்காகவோ, அளவுக்கு மீறிய சுமைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் சுமையை அதிகரித்து உழைப்பதால் அமைதி கிடைத்துவிட போவதில்லை, செயலை முடிக்க முடியாமல் போராட வேண்டி வரலாம்.

தினமும் அரைமணி நேரம் ஆழ்நிலை தியானம் பழகுங்கள், எண்ணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டால் மிஞ்சியிருப்பது அமைதி மட்டுமே. உள்ளம் காலியாக இருந்தால் அந்த காலியிடங்களை நல்லவைகளால் நிரப்புங்கள். இது சாத்தியம்தானா, என்னால் முடியுமா இதை பிறகு பார்க்கலாம் என்று தள்ளி போடாதீர்கள் இது மன போராட்டத்தை ஏற்படுத்தும். எல்லாவற்றிர்க்கும் மேலாக கடந்ததை, இழந்ததை நினைத்து ஏங்காமல் புதிய வழியினை உருவாக்குங்கள் இந்த வழிமுறைகளை கையாளுங்கள் பின்பு அங்கே மீதமிருப்பது அமைதி மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக